Soundarya Lahari

Wednesday, April 1, 2020

மாடசாமியின் சாட்சி

'குற்றம் சாட்டப் பட்டவரை உங்களுக்குத் தெரிகிறதா?'

'ஏன் தெரியாம, நல்லா தெரியறாரே.. கருப்பு கால்சட்டை, மஞ்ச சொக்கா போட்டிருக்காரு, மூக்குக் கண்ணாடி போட்டிருக்காரு, சட்டைப் பையில பேனா ….'

'நான் கேட்டது அந்தத் தெரிகிறதா இல்லை'

'பின்னே எந்த?'

'அவரை அடையாளம் தெரிகிறதா?'

'ஏன், மாறு வேசத்துலயா வந்து கீறாரு?'

'குற்றம் சாட்டப் பட்டவரின் பெயர் என்னவென்று தெரியுமா?'

'இன்னா சார் இது, இப்பதானே டவாலி மூணு தபா கூப்ட்டாரு. எப்புடித் தெரியாம இருக்கும்?'

'டவாலி கூப்பிடுவதற்கு முன்னரே அவரைத் தெரியுமில்லையா?'

'அதெப்டி சார் தெரியும். கூப்டத்துக்கு அப்பாலதான வந்தாரு. அதுக்கு மிந்தி வெளியில நின்னாரு. அப்ப உங்களுக்குத் தெரிஞ்சாரா?'

'நான் கேட்டது அதுவல்ல'

'சரி, அப்ப வேற எதுனா கேளுங்க'

'குற்றம் சாட்டப்பட்டவர் உங்களுக்கு அறிமுகம் ஆனவரா?'

'இல்லைண்ட்டு மறுக்கா அதையே கேக்குறீக்களே?'

'யுவர் ஆனர், இவர் ஒரு ஹோஸ்டைல் விட்னஸ்'

'ஹோட்டல்லாம் எதும் இல்லைங்க. பொட்டிக்கடைதான் வச்சிருக்கேன்'

'மிஸ்டர் மாடசாமி, அரசாங்க வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று சுருக்கமாக பதில் சொல்லுங்கள்'

'சரிங்க எசமான்'

'குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரியுமா?'

'ஆம்'

'எத்தனை நாட்களாக?'

'ஆம்'

'கேள்விக்கு பதில் இதுவல்ல'

'ஐயாதானெ ஆம், இல்லைன்னு மாத்திரம் சொல்லச் சொன்னாரு?'

'மிஸ்டர் மாடசாமி, கொலை நடந்ததைப் பார்த்தீர்களா இல்லையா?'

'இல்லைங்க'

'உங்கள் கடை வாசலில்தானே நடந்தது?'

'எது?'

'கொலை'

'கொலையெல்லாம் நடக்கல்லைங்க. இரும்பு பைப்பால அட்ச்சாரு'

'அது கொலை இல்லையா?'

'அட்சாலே கொலையா? செத்தாத்தானே கொலை?'

'தாக்கப்பட்டவர் இறந்து விட்டார்'

'அப்டீன்னு சொன்னது யாரு?'

'டாக்டர்'

'அப்போ கொலையை அவுருதான் பாத்தாரு, அவரை சாட்சியாக் கூப்பிடுங்க'

'அவர் இறந்ததைத்தான் பார்த்தார்'

'நா அட்சதைத்தான் பார்த்தேன்'

'அடித்ததால்தான் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார் டாக்டர்'

'வக்கீலய்யா.. மூணு மேட்டர் நடந்து கீது. அட்சது, பாத்தது, செத்தது. அட்சதை டாக்டர் பாக்கல்ல. செத்ததை நா பாக்கல்லே. அட்சவரும் அட்சதை மட்டும்தான் பாத்தாரு. அட்சதுக்கு ரெண்டு சாச்சி இருக்கு. செத்ததுக்கு ஒரு சாச்சிதான் இருக்கு'
'அதையெல்லாம் கோர்ட் பார்த்துக் கொள்ளும்'

'செத்ததையா?'

'அடித்ததை நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா?'

'இல்லை. நா பாக்கறப்போ அவர் அட்சாரு'

'இரண்டுக்கும் என்ன வித்யாசம்?'

'அடிக்கிறதைப் பாக்கறதுன்னா அடிக்கப் போறது தெரியும்ன்னு அர்த்தம். பாக்கிறப்பொ அட்சார்ன்னா தெரியாதுன்னு அர்த்தம். டாக்டர் பாக்கறப்போ செத்தாரா, இல்லைன்னா சாவுறதை டாக்டர் பாத்தாரா? சாவுறதைப் பாத்தாருன்னா டாக்டர் குத்தவாளிதானே?'

'யுவர் ஆனர். நடக்கிற கூத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்'

'இல்லை மிஸ்டர் பிராஸிக்யூட்டர். நான் பார்க்கும் விசாரணை கூத்தாக இருக்கிறது'

'ஐயா பாயிண்ட்டைப் புட்சிக்கினாரு'

No comments:

Post a Comment

Put in your thoughts here ...